கடந்த 1922ஆம் ஆண்டு, அண்ணல் காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சார்பாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடி நடத்தி பலரை கொன்றனர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சவுரி சவுரா காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். சுதந்திர போராட்டத்திற்கு ஊந்துசக்தியாக அமைந்த இந்த நிகழ்வு நடந்து நூறாண்டுகள் ஆகிறது.
இந்நிலையில், சுதந்திர போராட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்திய சவுரி சவுரா சம்பவத்தின் நூற்றாண்டு விழாவை பிரதமர் மோடி பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "சுதந்திர போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சவுரி சவுரா சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்துள்ளன.
எனவே, அதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்தாண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தொடரவுள்ளது. எனவே, நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள கொண்டாட்டங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். தபால் தலையும் வெளியிடவுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.