மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக 'உயர் கல்வியில் மாறுதலுக்குள்ளாகும் சீர்திருத்தம்' என்ற பெயரில் நாளை (ஆகஸ்ட் 7) மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. அதில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்றவுள்ளார். எதிர்கால சூழல், பலதரப்புக்கு ஏற்ற முழுமையான கல்வி, தரமான ஆராய்ச்சி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, புதிய கல்விக் கொள்கையை வகுத்த குழுவின் தலைவர், உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் எனப் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
1986ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டுவந்த கல்விக் கொள்கையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை உலகத்தரமாக்கும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாற்றம் மேற்கொண்டது.
ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி கட்டாயம், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர, தேசிய கல்வி முகமை மூலம் பொது நுழைவுத் தேர்வு எனப் பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: மாநிலங்களுக்கான கரோனா நிதி: 2ஆவது தவணையாக ரூ.890.32 கோடியை விடுவிக்க அனுமதி!