சிஐஐ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, கரோனா ஊரடங்கில் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார துயரத்தில் ஒரு பெரிய நகைச்சுவையாகும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'கரோனா பிரச்னைகளை சரிசெய்வதற்குப் பதிலாக, "தன்னம்பிக்கை பாதை" என்ற சொல்லை பிரதமர் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். நேற்று சிஐஐ மாநட்டில் பிரதமர் ஆற்றிய உரை, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார துயரத்திற்கு ஒரு பெரிய நகைச்சுவையாகும்.
நாட்டு மக்களின் அவலநிலைக்கு நேர்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவை.
முதல் ஊரடங்குக்கு முன்னர் தனது உரையில் பிரதமர், 18 நாள்களில் 'மகாபாரதப் போர் வென்றது, ஆனால் கோவிட் -19க்கு எதிரானப் போராட்டம் 21 நாள்களில் முடியும்’ எனத் தெரிவித்தார். அதையடுத்து மே 3க்குப் பிறகு கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து விடும் என்று நிதி(NITI) ஆயோக் அறிக்கை அளித்ததைக் குறிப்பிட்டார். ஆனால், அப்படி கரோனா வைரஸ் தாக்கம் குறையவில்லை, மக்களின் நம்பிக்கையும் குறைந்துவிட்டது.' என்று வீரப்பமொய்லி விமர்சித்தார்.