குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அட்டவணையில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. காந்திநகரில் உள்ள மறைந்த முன்னாள் குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேலின் குடும்பத்தினரை மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் குஜராத் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கேசுபாய் படேல் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 92. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்திலிருந்து, தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு மோடி பயணம் மேற்கொள்வத இதுவே முதல்முறையாகும்.
படேல் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவடியாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைவார் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
தனது பயணத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள்(அக்டோபர் 31) விழாவையொட்டி, கேவடியாவுக்கு அருகிலுள்ள 'ஒற்றுமை சிலையில்' பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தயுள்ளார்.
இந்தியாவின் "இரும்பு மனிதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள 182 மீட்டர் உயரமுள்ள ஒற்றுமை சிலைக்கு அருகில் உருவாக்கப்பட்ட ஜங்கிள் சஃபாரி என்று பிரபலமாக அழைக்கப்படும் சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை பிரதமர் மோடி முதலில் திறந்து வைக்கிறார். இங்கு உலகம் முழுவதிலுமிருந்து கொண்டுவரப்பட்ட காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
பின்னர், படேல் சிலைக்கும், ஸ்ரேஷ்த் பாரத் பவனுக்கும் இடையில் நர்மதா ஆற்றில் இயங்கும் படகு சேவையை பிரதமர் திறந்து வைக்கிறார். அதில், பிரதமர் படகு சவாரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து கொண்டு வரப்படும் கைவினைப் பொருட்களை சுற்றுலாப் பயணிகள் வாங்க ஏதுவாக படேல் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஏக்தா மாலினை பிரதமர் திறந்துவைக்கிறார்.
குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா மற்றும் யூனிட்டி க்ளோ கார்டன் ஆகியவை திறந்து வைக்கப்படும் தளத்தை இரவு நேரங்களில் ஒளிரச் செய்ய சுமார் 30 லட்சம் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சர்தார் படேலின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அக்டோபர் 31ஆம் தேதி காலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒற்றுமை சிலைக்கு வருகை தருகிறார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய ஆயுத காவல் படை, குஜராத் காவல் துறையினரால் ஏக்தா திவாஸ் பரேட் என்ற அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணிவகுப்பு நிகழ்ச்சியில் பேசிய பின்னர், வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அலுவலர்கள் என்றும் அழைக்கப்படும் சிவில் சர்வீஸ்சில் தேர்ச்சி பயிற்சியில் உள்ளவர்களிடம் மோடி உரையாடயுள்ளார்.
பிற்பகலில், கேவடியா - அகமதாபாத்தை இணைக்கும் புகழ்பெற்ற கடல் விமானம் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்காக, சர்தார் சரோவர் அணைக்கு அருகிலுள்ள ஏரியில் மிதக்கும் தளம் கொண்ட நீர் ஏரோட்ரோம் கட்டப்பட்டுள்ளது. கடல்விமானம் மூலம் சபர்மதி ஆற்றங்கரையை அடையும் பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து டெல்லி புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.