ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள சா்கி தாத்ரி, தானேசா் ஆகிய இடங்களில் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கியது தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தன்னைப்பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படப் போவதில்லை என்றும் மத்திய அரசின் இந்த முடிவை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவுக்கு சொந்தமான நதி நீர் கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருப்பதாகவும், அந்த நாட்டிற்கு செல்லும் நதி நீரை முந்தைய அரசுகள் தடுக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு சொந்தமான நதி நீர் பாகிஸ்தானுக்கு செல்வதை இனியும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறினார். பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுத்து இந்திய விவசாயிகளிடத்தில் நிச்சயம் சேர்ப்பேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.