தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டுவருகிறது. அவர் பிறந்த அக்டோபர் 2ஆம் தேதியில் பிறந்த மற்றொரு மாபெரும் தலைவர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார்.
இந்நிலையில், அவரது நினைவிடம் அமைந்துள்ள டெல்லி விஜய்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ட்விட்டரில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்தியுடன், லால் பகதூர் சாஸ்திரி குறித்த காணொலி தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவரின் புகழஞ்சலி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "பிறந்தநாள் காணும் நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை நினைவுகூர்வோம். அவர், இந்திய நாட்டின் மிகச்சிறந்த மகன். இந்த நாட்டிற்காக தன்னையை அர்ப்பணித்தவர். அவரின் வீரம், எளிமை, நேர்மை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும்" என கூறியுள்ளார்.
ஜெய் ஜவான்; ஜெய் கிசான்! - முழங்கிய லால் பகதூர்
நேருவின் மறைவுக்குப் பிறகு இந்திய திருநாட்டின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்தவர் லால் பகதூர் சாஸ்திரி. இவரின் ஆட்சிக்காலத்தில் நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது. குறிப்பாக பசுமைப் புரட்சியில் வளர்ச்சி கண்டது.
அப்போது அவர் எழுப்பிய 'ஜெய் ஜவான்; ஜெய் கிசான்' எனப்படும் 'வாழ்க ராணுவ வீரன்; வாழ்க விவசாயி' என்ற முழக்கம் பட்டித்தொட்டியெங்கும் எதிரொலித்தது.