சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள உறவை போற்றும் ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண்மணி பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பிறந்து, திருமணத்திற்கு பிறகு குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு புலம்பெயர்ந்த இவர், பிரதமர் மோடியுடன் கடந்த 25 ஆண்டுகளாக ரக்ஷா பந்தனை கொண்டாடிவருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "30 முதல் 35 ஆண்டுகளாக பிரதமர் மோடியை எனக்கு தெரியும். முதலில் டெல்லியில் அவரை சந்தித்தேன். கராச்சியிலிருந்து திருமணமாகி இங்கு புலம்பெயர்ந்ததை அறிந்து கொண்ட அவர், என்னை சகோதரி என்றழைத்தார். எனக்கு சகோதரர்கள் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, டெல்லியில் மீண்டும் அவரை சந்தித்தபோது நான் அவருக்கு ராக்கி கயிறு கட்டினேன்.
மற்றொரு ரக்ஷா பந்தனின்போது அவர் குஜராத் முதலமைச்சராக வேண்டும் என்று வாழ்த்தினேன். அப்போது அவர் சிரித்தார். குஜராத் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் அவரை சந்தித்தேன். அப்போது, எனது பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தேன். கரோனா பெருந்தொற்று காரணமாக அவரை நேரில் சந்தித்து ராக்கி கட்ட முடியவில்லை. எனவே, ராக்கி கயிறு மற்றும் ஒரு புத்தகத்தை அனுப்பியுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: திலகரின் துணிச்சல் அனைவருக்கும் உத்வேகம் தருகிறது - மோடி புகழாரம்