நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்துவந்த அயோத்தி வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், மசூதி கட்டுவதற்காக வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, சன்னி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், தீர்ப்பு வழங்கிய மூன்று மாதத்திற்குள் அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கி, அதற்குத் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் என்பவரையும் உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமித்தது.
கோயில் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அறக்கட்டளை மேற்கொண்டிருந்த வேளையில், கரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கோயில் கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கடந்த ஜூன் மாதம் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கோயில் கட்டுவதற்கான திட்ட வரைவை அறக்கட்டளைக் குழு உருவாக்கிவந்தது. இச்சூழலில், நேற்று மகந்த் கோபால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் பேசிய அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், 5 குவிமாடங்களுடன் 161 அடி உயரத்தில் ராமர் கோயில் எழுப்பப்படவுள்ளதாகவும், ஆகஸ்ட் 3 அல்லது 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் பூமி பூஜைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மேலும், கோயில் கட்டுவதற்கான திட்ட முன்மொழிவை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ராமர் கோயிலைக் கட்டுவதற்கான முழு வடிவம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு முன்மொழிந்த வடிவமைப்பில் கோயில் அமையவிருப்பதாகவும் தெரிவித்தார். அந்த வடிவமைப்பில் நீளம், அகலம், உயரம் ஆகியவை மட்டும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கரோனாவால் கட்டுமானப் பணிகளின் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கோயிலை முழுவதுமாகக் கட்டி முடிக்க மூன்றரை ஆண்டுகளாகும் எனவும் கூறினார்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கேட்டுக்கொண்டதையடுத்து, பிரபல கட்டட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோம்புராவால் ராமர் கோயில் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அமைப்பின் அப்போதைய தலைவர் அசோக் சிங்கல், 1989ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயிலின் அமைப்பை வடிவமைக்க சந்திரகாந்தைத் தேர்வு செய்திருந்தார்.
அவருடைய வடிவமைப்பு நாடு முழுவதும் இருக்கும் பக்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த வடிவமைப்பு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, அந்த வடிவமைப்பிலேயே ராமர் கோயில் இருக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராம ஜென்ம பூமியை மீண்டும் அகழாய்வு செய்ய யுனெஸ்கோவை நாடும் புத்தத் துறவிகள்!