டெல்லி: சாலையோர வியாபாரிகள் பயனடையும் வகையில் கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் செழுமையடையும் எனவும் தெரிவித்தது.
இந்தத் திட்டத்தில் சேர இதுவரை 24 லட்சம் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 12 லட்சம் மக்கள் தங்களுக்கான கடன் தொகையை பெற்றுள்ளனர். இதற்காக 5.35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு 3.27 லட்சம் மற்றும் 1.87 லட்சம் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போது உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் பொருட்டு, மத்திய அரசு சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தால் சாலையோர வியாபாரிகள், பெரு நிறுவனங்களுக்கு இணையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம். பெரும்பாலான சாலையோர உணவுக் கடைகள் பயனடைந்துள்ளனர்" என்றார்.