சர்வதேச நீதித்துறை கருத்தரங்கு உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று தொடங்கியது. இரண்டு நாள் கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கிவைத்து விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
மாறிவரும் உலகில் நீதித்துறை என்றத் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், 'இந்த முக்கியமான கருத்தரங்கு அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டு விழாவில் நடைபெறுவதை நாம் பெருமையாகக் கொள்ள வேண்டும். இந்தியாவில், சட்டத்திற்கு என்றும் உயரிய இடம் அளிக்கப்படும். அரசியல் அமைப்புச் சட்டம் வழக்கறிஞரின் ஆவணங்கள் மட்டும் இல்லை, வாழ்க்கை முறையாகும். இந்திய நீதித்துறை, நிர்வாகம், சட்டத்துறை அனைத்தும் இந்திய அரசியல் சாசனத்தை மதிப்புமிக்க முறையில் பின்பற்றி வருகின்றன' எனத் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், பெண்கள் ஆகியோரின் உரிமைகளைக் காப்பாற்றும் சீரிய பணிகளை நீதித்துறை மேற்கொண்டதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, சமநிலையைத் தக்க வைப்பதில் இந்திய நீதித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
நீதித்துறை சுமையைக் குறைத்து வழக்கு விசாரணையை விரைவுப்படுத்தும் விதமாக இ-கோர்ட்டுகள் அமைப்பதில், அரசு முனைப்புடன் செயல்பட்டுவருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களின் நேர்மைப் பண்பை வளர்க்க 'நேர்மை அங்காடி'