இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் லடாக்கில் உள்ள லே எல்லைப்பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணம் மேற்கொண்டார்.
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவணே ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர். லே பகுதியில் உள்ள நிமு என்ற பகுதியில் முகாமிட்டுள்ள பாதுகாப்புப் படையினரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும், கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
பின்னர் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய மோடி, நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் பெருமைக்குரிய சின்னமாக விளங்கும் லடாக் தியாக உணர்வு மிக்க மக்களைக் கொண்டுள்ளது. பிரிவினை கருத்துகளை தெரிவிக்கும்போதெல்லாம் மக்கள் நாட்டிற்காக ஒன்றிணைந்து பகைவர்களை வென்று காட்டியுள்ளனர். ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாடு என்று மறவாது. உங்களது தைரியத்தின் உயரம் நீங்கள் தற்போது நிற்கும் மலையின் உயரத்தை விட பெரியது.
புல்லாங்குழலை வாசிக்கும் கிருஷ்ணரை வழிபடும் நாம் சக்கரம் என்ற ஆயுதத்தை கொண்டுள்ள அதே கிருஷ்ணரைத்தான் பின்பற்றுகிறோம் என்பதை உலகம் மறந்துவிடக்கூடாது. உங்கள் தியாகம் மூலம்தான் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நாடு அடையும் என்றார்.
சீனாவை மறைமுகமாகத் தாக்கும் விதமாக பேசிய அவர், எல்லைதாண்டி ஆக்கிரமிப்பு செய்யும் காலம் எல்லாம் தற்போது மலையேறிப்போகிவிட்டது. இது வளர்ச்சிக்கான காலம். ஆக்கிரமிப்பு சக்திகள் தோல்வியே சந்தித்துள்ளன என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. லே, லடாக் தொடங்கி சியாச்சின், கார்கில், கல்வான் என எல்லையின் அனைத்துப் பகுதிகளிலும் இந்திய வீரர்களின் வீரம் பறைசாற்றப்பட்டுள்ளது என பேசினார்.
இதையும் படிங்க: இவ்வளவு பெரியா ரயிலா... இந்திய ரயில்வே புதிய சாதனை!