உலக வறுமையை ஒழிக்கும் நோக்கில் 1945ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தொடங்கப்பட்டது. ஐநாவின் கீழ் இயங்கிவரும் இந்த அமைப்பு, உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து மிக்க உணவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த அமைப்பின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு, இன்று பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இந்தியா, உணவு மற்றும் வேளாண் அமைப்புக்கிடையே உள்ள உறவை பறைசாற்றும் வகையில் இது வெளியிடப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரி தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட எட்டு புதிய வகை பயிர்களையும் மோடி அறிமுகம் செய்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விவசாயம், ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகியவைக்கு அரசு தரும் முன்னுரிமை இந்நிகழ்ச்சியின் மூலம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை களைய அரசு உறுதி பூண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகள், தோட்டக்கலை ஆகியவற்றின் மூலம் அரசின் முன்னுரிமை தெரியவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உணவு மற்றும் வேளாண் அமைப்பிடம் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க உறவை கொண்டுள்ளது. இந்திய ஆட்சிப்பணி அலுவலர் பினய் ரஞ்சன் சென் இந்த அமைப்பின் இயக்குநராக இருந்தபோதுதான் உலக உணவு திட்ட அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, உலக உணவு திட்ட அமைப்புக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது - ராகுல் காந்தி