நடப்பாண்டு (2020) முடிவடையும் தறுவாயில் உள்ள நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். மேலும், 2021ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாழ்த்துகளைக் குடியரசுத் தலைவரும், பிரதமரும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த 2020ஆம் ஆண்டு கோடிக்கணக்கான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஒரு கடினமான ஆண்டாகவே இந்த ஆண்டு அமைந்தது. தற்போது தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருவதால் இதன்மூலம் இந்தியா இயல்புநிலைக்கு மீண்டுவருகிறது.
கரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள், நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்டமாகப் பஞ்சாப், அஸ்ஸாம், ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி சந்திப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது வரும் ஆண்டிற்கான வளர்ச்சிகள் குறித்த நம்பிக்கையைக் காட்டுகிறது.