இது குறித்து அவர் நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டியளிக்கையில், “அமெரிக்க பொருளாதாரமே ஆழ்ந்த சிக்கலில் சிக்கியிருக்கும் நேரத்தில், இந்தியாவை தனது உற்பத்திகளை விற்க ஒரு சாத்தியமான சந்தை என்பதை அவர்கள் (அமெரிக்கா) கண்டுபிடித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்து ஆட்சி நடத்திவருகிறது" என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியா வருகை குறித்து பதிலளித்த ராஜா, "பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது 'ஹவுடி-மோடி' நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
தேர்தலை மனதில் வைத்து 'ஹவுடி-மோடி' பரப்புரை செய்யப்பட்டது. இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்த இரு தலைவர்களும் தங்கள் நிகழ்ச்சி நிரலை மனதில் வைத்தே செயல்படுகிறார்கள்.
ட்ரம்பின் இந்தியப் பயணத்தைக் கண்டித்தே இடதுசாரிக் கட்சிகள் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இந்த ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய அமைதி, ஒற்றுமை அமைப்புகள் ஏற்பாடு செய்தன, அதற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்தன. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேலும் பல அமைப்புகளும் ஆதரவளித்தன.
நரேந்திர மோடியின் அமெரிக்க சார்பு கொள்கைகளுக்காக இந்தியர்கள் துன்பத்தில் உள்ளனர். ஆசியா முழுவதும் தனது வர்த்தகத்தை நிலைநிறுத்தச் செய்வதற்கே இந்தியாவை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது. அதன் காரணமாகவே ஆசிய பிராந்தியத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த இந்தியாவை தனது நட்பு நாடாக வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது.
இந்தியாவில் நிலவும் வறுமையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காண வேண்டும் என்று மோடி ஒருபோதும் விரும்பவில்லை. ட்ரம்பின் வருகைக்கு முன்னதாக அகமதாபாத்தில் ஒரு சுவர் கட்டப்பட்டது. சேரிகளில் வாழும் மக்களால் அமெரிக்க அதிபரைப் பார்க்கவோ, ட்ரம்ப் இந்தியாவில் சேரிகளைப் பார்க்கவோ முடியாத வகையில் சுவர் கட்டப்பட்டதை நாடே அறியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : டெல்லி வன்முறை: 20 பேர் காயம், தலைமைக் காவலர் உயிரிழப்பு
!