கர்தாபூர் குருநானக் சாஹிப் குருத்வாரா வழித்தட இணைப்பு சிறு பார்வை
சீக்கிய மதத்தை நிறுவியர் குருநானக். சீக்கியர்கள் முதல் குருவான இவர், தன் வாழ்நாளில் கடைசி நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தாபூரில் கழித்தார். அவரின் நினைவாக அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா நிறுவப்பட்டது. அப்போது பாகிஸ்தான் பிரிக்கப்படாததால், சீக்கியர்கள் அனைவரும் எளிதாக குருநானக்கின் பிறந்தநாளுக்கு கர்தாபூருக்கு யாத்திரை செல்வார்கள். 1947ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் பிரிக்கப்பட்டதால் பஞ்சாப் பகுதி இரு பிரிவுகளாக துண்டானது. இதில், கர்தாபூர் பகுதி பாகிஸ்தான் எல்லைக்குட்பட்டதானது.
இதனால், சீக்கியர்கள் தங்களது குருவான குருநானக்கின் நினைவிடத்திற்கு யாத்திரை செல்ல முடியாமல் தவித்தனர். ஆச்சர்யாமான விஷயம் என்னவென்றால் இந்திய எல்லைக்கும் குருத்வாராவுக்கும் இடையே உள்ள தூரம் 4.7 கி.மீ. தான். சிலர் விசா மூலம் பாகிஸ்தானுக்கு யாத்திரை சென்றாலும் மற்றும் சிலர் இந்திய எல்லையிலிருந்து தொலைநோக்கி வழியாகவே குருத்வாராவை பார்த்து வந்தனர்.
இந்த சூழலில்தான் 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கர்தாபூர் குருத்வராவுக்கு தேசிய வழித்தடம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பின் 2018ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளில்(நவம்பர் மாதம்) இந்த வழித்தடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதன்மூலம், இந்திய சீக்கியர்கள் விசா இன்றி சாலை வழியாக கர்தாபூருக்கு யாத்திரை சென்று தங்களது குருவான குருநானக் நினைவிடத்திற்குச் செல்லலாம்.