இதுகுறித்து சிவ சேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில், "நரேந்திர மோடி போன்ற தலைவரைப் பெற இந்தியா கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த நாடு குறித்தும், பல்வேறு பிரச்னைகள் குறித்தும், அவர் நாள் பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். வலிமையான, திறமைப் படைத்தத் தலைவர் மோடி. அவருக்கு மாற்று யாரும் இல்லை.
தான் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கடந்த 60 வருடங்களாக இந்தியாவில் திருத்தப்படாது இருந்த பல தவறுகளையும், அவர் திருத்தியுள்ளார். எனினும், மோடி ஆட்சியிலும் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. சரியான திட்டமிடலின்றி அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கு காரணமாக, அப்பாவி புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் எதிர்கொண்ட துயரத்தை கண்முன் கொண்டுவந்தது.
இந்தத் தவறை அவர் எப்படி சரிசெய்யப் போகிறார் ? மோடியைப் பெற இந்தியா அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும். ஆனால், பொது ஊரடங்கு, பணமதிப்பிழப்பு (2016) நடவடிக்கைகளால் தேவையில்லாமல் உயிரிழந்தவர்களை அவரால் மீண்டும் கொண்டுவர முடியுமா? இந்தியா என்ற நாடே கடந்த ஆறு ஆண்டுகளாகத் தான் நிலவிவருவது போன்று பாஜக தலைவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியைப் பாராட்டி வருகின்றனர்.
சுதந்திரத்திற்காப் போராடி இந்தியா என்ற நாட்டை வென்றெடுத்து, பலரின் உழைப்பினால் தொழில், சமூகம், அறிவியல், மருத்துவத் துறைகளில் இந்நாடு அடைந்த பல முன்னேற்றங்கள் பொய்யா என்ன? கடந்த 1971ஆம் ஆண்டு, இந்திரா காந்தி பாகிஸ்தானைப் பழிவாங்க வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்க உதவி செய்தார்.
இதனை வரலாற்றுச் சாதனை என்பதா அல்லது தவறா என்பதா? கடந்த 70 ஆண்டுகளில், பாஜகவின் அடல் பிகாரி வாஜ்பாய் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். விபி சிங், சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர்களாக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர். இந்த ஆண்டுகளில் இந்தியா கண்ட வளர்ச்சி தேவையற்றது என்றும், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டுமே இந்தியா வளர்ச்சி கண்டுள்ளதென்றும் சொல்வது தவறு.
இந்த ஆறு ஆண்டுகளில் ஏன் இன்னும் சாவர்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை ? பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்துள்ளது. இந்திய அரசியலைப்புச் சட்டம் 370-வது பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு, எந்த நம்மையும் நிகழவில்லை.
தற்போது புதிதாக இந்தியா-சீனா எல்லையில் பிரச்னை எழுந்துள்ளது. நேபாளம் போன்ற ஒரு நாடு நம் நிலப் பகுதியைத் தங்களுடையது என உரிமை கொண்டாடுகிறது. தற்சார்பு, வலுவான இந்தியாவுக்கான அறிகுறிகளாக இது தெரியவில்லையே" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கிரண் பேடி!