பொது வாழ்க்கையில் பிரதமர் மோடியின் பயணம் 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக தொடங்கியது. இதைத்தொடர்ந்து, 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
இப்படி இருக்கையில், குஜராத் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தபோது 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இவர் மக்களிடையே பிரபலமடைந்து வந்ததால், 2013ஆம் ஆண்டு பாஜக இவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.
மோடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி பிரதமர் ஆனார். பின்னர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமராக பதவி ஏற்றார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மோடியின் சாதனைகள் குறித்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "மோடியின் முதல் பதவிக்காலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தது. அவரின் இரண்டாவது பதவிக்காலம், 130 கோடி இந்தியர்களின் எதிர்காலத்திற்கான விதையை விதைத்துள்ளது. இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு 370 கடந்த காலமாக மாறிப்போனது. ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் சீர்திருத்தம், நிலக்கரிச் சீர்திருத்தம், விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அந்நிய நேரடி முதலீட்டிலும் வரி வருவாயும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆயுர்வேதம் மற்றும் யோகா நெறிமுறையைப் பாராட்டிய மோடி!