குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஆலோசிக்க இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 20 கட்சிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து வயநாடு மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் தேசத்திற்கு மிகப்பெரிய தீங்கை செய்கிறார். 50 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது.
இதுகுறித்தெல்லாம் பல்கலைக்கழக மாணவர்களிடம் விவாதிக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு உள்ளதா? துரதிர்ஷ்டவசமாக நாட்டின் பிதமருக்கு இந்த தைரியம் இல்லை. மாணவர்களுக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு அவர்கள் காவல் துறையை வைத்து நசுக்குகிறார்" என்று பிரதமர் மோடியை தாக்கிப் பேசினார்.
மேலும், காவல் துறையின் உதவியின்றி மோடியால் பல்கலைக்கழகத்திற்குள் சென்று, நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து மாணவர்களிடையே விவரிக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில திமுக, சிவசேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.
இதையும் படிங்க: ஓயோவில் 1000 பேரின் வேலை காலி!