சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூருவில் உள்ள அதன் தலைமையகம் சென்று, விஞ்ஞானிகளுடன் அமர்ந்து சந்திரயான் லேண்டர், நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆனால் விஞ்ஞானிகளுடனான கட்டுப்பாட்டுத் தொடர்பிலிருந்த லேண்டர் துண்டிக்கப்பட்டது. இதனால், விஞ்ஞானிகள் அனைவரும் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகினர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, 'கவலைப்பட வேண்டாம்' என்று ஆறுதல் கூறினார்.
மேலும் நாட்டு மக்களுக்கு இஸ்ரோ ஆய்வு மையத்திலிருந்து உரையாற்றிய மோடி, நிலவில் தண்ணீர் இருப்பதை முதன் முதலில் கண்டறிந்தது சந்திரயான்தான் எனவும், விஞ்ஞானிகளின் இந்த உழைப்பை அனைத்து இந்தியர்களுக்குமான பெருமை என்றும் அறிவியல் அறிஞர்களை பெருமைப்படுத்தும்விதமாகக் கூறினார்.
இதையடுத்து அங்கிருந்து பிரதமர் மோடி கிளம்பும் நேரத்தில் கண்கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித்தழுவி ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விஞ்ஞானிகளின் முயற்சியைப் பாராட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.