இலங்கை அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில், நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கையில் எப்போதும் தேர்தல் நடைபெற்ற அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஆனால், அந்த வழக்கத்தை மாற்றி மறுநாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
ஆரம்பத்திலிருந்தே மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுன முன்னிலை வகித்துவந்தது. மொத்தமாக 70 விழுக்காடு வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாக்குகளை மகிந்த ராஜபக்சவின் கட்சி பெற்றுள்ளது.
இதனால் அக்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏறத்தாழ 225 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்ச, பொதுஜன பெரமுன கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அவ்வாறு கிடைத்துவிட்டால், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்பில் தடைசெய்யப்பட்ட அதிபருக்கான அதிகாரங்களை மீட்டுவிடலாம் என்று அவர் நம்புகிறார்.
கிட்டத்தட்ட மகிந்த ராஜபக்சவின் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு கனிந்திருக்கும் நிலையில், உலகத் தலைவர்களில் முதலாவதாக இந்தியப் பிரதமர் மோடி மகிந்த ராஜபக்சவை போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜபக்ச உறுதிசெய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போனில் தொடர்புகொண்டு வாழ்த்திய இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மக்களின் பேராதரவோடு இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறேன். இருதரப்பு உறவை மேம்படுத்தி இந்தியாவுடன் பணியாற்ற எண்ணுகிறேன். இலங்கையும் இந்தியாவும் நண்பர்களாக இருப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.