பிரான்ஸ் நாட்டில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று இஸ்லாம் மதம் குறித்து கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேலிச் சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்தால் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் பெண்ணின் தலையை வெட்டி அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் படுகொலை செய்துள்ளார். மேலும் இருவரை அவர் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தேவாலயத்திற்குள் நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல் உட்பட பிரான்சில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த இரங்கல். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பிரான்சுடன் நிற்கும்" என பதிவிட்டுள்ளார்.