புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 14 ஆயிரத்து, 571 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 36 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 6,012 மாணவர்களும், 7,294 மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டுக்கான தேர்ச்சி விகிதம் 91.32 விழுக்காடாக உள்ளது.
இது, கடந்தாண்டை விட 1.62 விழுக்காடு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதுச்சேரி மாநில அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 161 பேர் தேர்வு எழுதினர். அதில் 5 ஆயிரத்து 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான தேர்ச்சி விகிதம் 81.97 விழுக்காடாக உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 3.65 விழுக்காடு குறைவாகும். புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8,410 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர்.
இவற்றில் 8 ஆயிரத்து 256 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 98.17 விழுக்காடு ஆகும். வழக்கம்போல, இந்தாண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.