ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ளது கொனுப்பலப்பாடு கிராமம். இந்தக் கிராமத்தில், கடந்த மே 15ஆம் தேதி அந்தப் பகுதியில் ஆதிக்கச் சக்திகள் சிலர், நிலத் தகராறு தொடர்பாகப் பட்டியலின தம்பதியான ஒப்பனா, ரத்தினகுமாரி ஆகியோரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் இரு பிரிவினர்களுக்கு இடையே சண்டையாக உருமாறியது.
இதையடுத்து அந்தத் தம்பதி, தங்கள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிய புகார் கொடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், அவர்களது சாதி சான்றிதழைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.
சாதிய வன்மத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலை, அரசியல் பின்புல அழுத்தம் காரணமாக மடைமாற்ற நினைத்து காவல் துறையினர் அவர்களது சான்றிதழைப் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் எனக்கூறி வழக்கை வேறுவிதமாக புனைந்துள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசலு, வருவாய்த் துறை அலுவலர் குணபூஷன் ரெட்டி இருவரும் மே 31ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசி, ஆய்வு மேற்கொள்ள சென்றபோதுதான் அந்தத் தம்பதியினர் இவர்களின் கால்களில் விழுந்து தங்களுக்கு நீதி வேண்டும் என்று மன்றாடி உள்ளனர்.
என்ன நடக்கிறதென புரியாத அலுவலர்கள், இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது நடந்த உண்மைகள் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் உண்மை நிகழ்வுகள் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குற்றச்செயலில் ஈடுபட்ட கிராம வருவாய்த் துறை அலுவலரை இடைக்கால பணிநீக்க ஆணை வழங்கப்பட்டது. மேலும், சாதி சான்றிதழில் குளறுபடி செய்ய முற்பட்ட மாவட்ட வட்டாட்சியரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார்.