டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இந்தக் குழுவில் உள்ள மாணவர்கள் தங்களின் வகுப்பு தோழிகள் மற்றும் சிறார்களின் நிர்வாண படங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுடன் படங்களுக்கு மதிப்பெண்ணும் வழங்கி வந்துள்ளனர்.
மேலும், பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வது பற்றியும் தங்களுக்குள் பேசிவந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே இவர்கள் தங்களுக்குள் வைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தெற்கு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் வைரலானது.
இந்நிலையில், பெண்கள், சிறார்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வது குறித்து பேசிவந்த பள்ளி மாணவர்களின் சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குழு குறித்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆனந்த் வர்மா, ஸ்துப் பிரகாஷ், சுபாங்கி ஜெயின் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், " சமூக ஊடக தளங்கள் தகவல் தொடர்பு இடைவெளியைக் குறைத்துள்ள நிலையில், மாணவர்களிடையேயான இதுபோன்ற கலந்துரையாடல் பெண்களை பகிரங்கமாக துன்புறுத்தும் தளமாக மாறியுள்ளது என்பதை நிரூபித்துள்ளது. இந்தச் சம்பவம் பெண்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மட்டுமல்லாமல், அத்தகைய நடத்தைகளில் ஈடுபடும் சிறார்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் வழங்கவேண்டும் "என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல் துறையின் சைபர் பிரிவினர், தென் டெல்லி பள்ளியின் ஒரு மாணவரை விசாரணை காவலில் வைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 22 பேரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பார்க்க: பெட்ரோல், டீசல் வரியை உயர்த்திய மத்திய அரசு!