உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சிவக்குமார் திரிபாதி என்பவர் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கருணை மனுக்களுக்கு காலக்கெடு மற்றும் விதிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில், “கருணை மனுக்களுக்கு உரிய காலத்தில் பதில் வருவதில்லை. நீண்ட நாள்களாக காலதாமதம் ஏற்படுகிறது. கருணை மனுக்கள் குற்றம் நிருபிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் உரிமை. ஆனால் இந்த மனுக்களுக்கு உரிய விதிமுறை, காலக்கெடு, சட்ட திட்டங்கள் என எதுவும் இல்லை.
கருணை மனுக்கள் சில நேரங்களில் அநீதியை இழைக்கின்றன. ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க சாதகமாக அமைந்து விடுகின்றன. இதுபற்றி பல நேரங்களில் மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கருணை மனுக்களுக்கு தனியாக சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளது. இதுபோல் இந்தியாவிலும் கருணை மனுக்களுக்கு சட்டதிட்டம், விதிமுறை மற்றும் காலக்கெடு ஆகியவற்றை அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கின் தண்டனைக்கைதி கடந்த மாதம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்திருந்தார். அந்த கருணை மனுமீது எவ்வித பதிலும் தெரிவிக்கப்படாத நிலையில், கடந்த வாரம் மனுவை வாபஸ் பெறப்போவதாக அவர் அறிவித்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!