’உடலுறவு’ என்ற சொல்லை உச்சரிப்பதே தவறு என்ற காலம் மலையேறி, இது குறித்து வெளிப்படையாக உரையாடும் நிலையை இன்றைய தலைமுறை எட்டியுள்ளது. இதில், போதிய அறிவியல், மருத்துவ விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், இத்தனை நாள்களில் இத்தனை முறை தான் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை பலரும் பின்பற்றி வருகின்றனர்.
சமீபத்திய மருத்துவத் தகவல்களின்படி, சாதாரணமாக ஒரு மாதத்தில் ஆறு முதல் எட்டு தடவை தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இது தனிப்பட்ட நபர்களின் விருப்பம் சார்ந்தது என்பதால், தங்களுக்குத் தேவைப்படும், ஏன் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுவோரும் உள்ளனர். உடலுறவு குறித்த சிந்தனை, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு நாளைக்கு பல முறை வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உடலுறவு என்பது உறவுகளை மேம்படுத்துவது மட்டுமின்றி உடைந்த நெஞ்சங்களையும் குணப்படுத்தவல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தினந்தோறும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவற்றை நமக்கு விவரிக்கிறார் பீட்மாண்ட் ஹெல்த்கேர் அட்லாண்டாவின் சிறுநீரக மருத்துவர் டாக்டர் நிகில் ஷா.
ரத்த அழுத்தம் சீராகும்:
ரத்த அழுத்ததிற்கும் உடலுறவுக்கும் பெரும் தொடர்பு உள்ளது. ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, பிஸியான கால அட்டவணைகள், நீண்ட நேர வேலை ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதனை அதிகரிக்கவும் வழிவகுக்கும். எனவே, துணையுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்தினால் நிச்சயம் மன அழுத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் குறித்த பிரச்னைகளை மருத்துவரிடம் செல்லாமல் இயற்கையாகவே குணப்படுத்திவிடலாம்.
இதய நோய் பிரச்னை இருக்காது:
அடிக்கடி உடலுறவு கொள்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இவை சுறுசுறுப்பு இல்லாத ஆண்களுக்குத்தான் பொருந்தும். ஆனால், அன்றாட வாழ்வில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஆண்களின் இதய ஆரோக்கியத்தை உறுதி செய்வதில், உடலுறவு நிச்சயம் முக்கியப் பங்காற்றும்.
ஆண்குறி விறைப்புத்தன்மை அபாயத்தை குறைக்கிறது:
அதிகப்படியான உடலுறவு கொள்வதால் ’ஆண்குறி விறைப்புத்தன்மை’ என்ற பிரச்னையின் ஆபத்து குறைவதாக பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவ்வப்போது உடலுறவு கொள்வது உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றுதான். ஒருவேளை நீண்ட நாள்களுக்கு உடலுறவு கொள்வதையே தவிர்த்துவிட்டால், விறைப்புத்தன்மை பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
புற்றுநோய் தடுப்பு:
தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபடும் கொள்ளும் ஆண்களுக்கு ’புரோஸ்டேட் புற்றுநோய்’ ஏற்படும் அபாயம் குறைகிறது. இது குறித்து, கடந்த எட்டு ஆண்டுகளாக, 46 முதல் 81 வயது வரையிலான 29,342 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்ட தேசியப் புற்றுநோய் நிறுவனம், உடலுறவு கொள்ளாததால் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பது குறித்து கண்டறிந்தனர். அதே சமயம், முறையாக உடலுறவு கொண்டால் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதும் உறுதியானது.
பிற நன்மைகள்:
அடிக்கடி உடலுறவு கொள்வது, ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க பெருமளவு உதவுகிறது. உடலுறவு ஒரு மிதமான உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 150 கலோரிகள் வரைக் குறைக்க இது உதவுகிறது. சதைகளை பலப்படுத்தவும், ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்டவும் உதவும் உடலுறவு, நீண்ட ஆயுளையும் அளித்து வாழ்வை பலப்படுத்துகிறது.
எனவே, உங்களுக்கும் உங்களது துணைக்கும் இடையிலான பந்தத்தின் தீயை ஒருபோதும் அணைய விடாதீர்கள். உங்களது தனிப்பட்ட, பாலியல் வாழ்க்கை மந்தமாக இருக்க வேண்டாம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு துணையுடன் நீங்கள் செலவழிக்கும் நேரம், உங்களது வாழ்வையே ஒளிமயமாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!