பசுமை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ் திட்டமானது பிரதமரின் ’ஆத்மா நிர்பர் பாரத்' என்ற முதன்மை திட்டத்தின் கீழ் செயல்படவுள்ளது.
இதுகுறித்து பெட்ரோலிய துறையின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "பசுமை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை வெளிக்கொண்டு வர செயல்படுத்தப்பட்ட திட்டம்தான் SATAT( Sustainable Alternative Towards Affordable Transportation). இந்த திட்டத்தின் படி, 5 ஆயிரம் சிபிஜி உற்பத்தி ஆலைகளை 2023ஆம் ஆண்டுக்குள் நிறுவ திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், சுமார் 15 மில்லியன் மெட்ரிக் டன் கம்ப்ரஸ்டு பயோ கேஸ் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிபிஜி ஆலைகள் செயல்படத் தொடங்கினால், அது மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி, வருவாயை பெருக செய்யும். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவிசெய்யும். நிச்சயமாக, வணிக வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறையும்" என்றார்
மேலும் அவர் கூறுகையில், "சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சிபிஜி ஆலையில், ஒரு கிலோ சிபிஜியை ரூ.54.64 க்கு விற்பனை செய்கிறார்கள். அதன்படி, ஒரு கிலோ சிபிஜி மூலம் ஒரு காரால் 25 கி.மீ தூரம் பயணிக்க முடியும். ஒரு கி.மீ தூரத்திற்கு 3 ரூபாய் மட்டுமே செலவிடுகிறோம். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசலில், அது அப்படி கிடையாது. வாகனங்கள் தவிர, நாடு முழுவதும் உள்ள தொழில் துறை சாதனங்களுக்கும் சிபிஜி பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.