பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு சந்தைக்கு ஏற்ப நாள்தோறும் மாற்றியமைத்து வந்த எண்ணெய் நிறுவனங்கள், மார்ச் 14ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மூன்று ரூபாய் உயர்த்தியது. அதன்பிறகு கரோனா காரணமாக விலை ஏற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் முறை அமலுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து தினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி 9ஆவது நாளான இன்றும் (ஜூன் 15) விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.26 ஆகவும், டீசல் விலை ரூ 74.26 ஆகவும் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.96 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.69 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
நமக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாக பெட்ரோல், டீசல் மாறிவிட்ட சூழலில், இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் இனிவரும் காலங்களில் உயர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மின் அளவு கணக்கீடு: மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு