கரோனா ஊரடங்கு காரணமாக நாட்டு மக்கள் வருமானத்தை இழந்து தவித்துவரும் வேளையில், எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 62 காசுகள் உயர்த்தப்பட்டு 75.78 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 64 காசுகள் உயர்த்தப்பட்டு 74.03 ரூபாய்க்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதுபோன்று நாடு முழுவதும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி அடிப்படையில் சிறிது கூடுதலாகவோ, குறைவாகவோ விற்கப்படுகிறது.
ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே 62, 64 காசுகள் உயர்த்தப்படுவது, கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
கடந்த எட்டு நாள்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.4.52, ரூ.4.64ஆக உயர்ந்துள்ளன. இந்த செய்தி பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ந்துவரும் சூழலில், மத்திய அரசு வருமானத்தைக் கூட்டும் நோக்கில் மார்ச் 14ஆம் தேதி பெட்ரோல், டீசலின் கலால் வரியை தலா மூன்று ரூபாயும், மே 5ஆம் தேதி முறையே 10, 15 ரூபாயும் உயர்த்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.