புதிய நோய்க்கு காரணம்
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத் தலைமையகமான எலுருவில் ஏற்பட்ட புதிய நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் என அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மற்றும் பிற அமைப்புகள் தெரிவித்துள்ளதாக ஆந்திர அரசு நேற்று (டிச. 16) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் வல்லுநர்கள், மனித உடலில் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி கலந்தது என்பது குறித்து ஆராய நீண்டகாலம் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஜெகன்மோகனின் நடவடிக்கை
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்தப் புதிய நோயைக் கண்டறியும் பொறுப்பை எய்ம்ஸ் மற்றும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். மேலும், அவர் இது குறித்து வல்லுநர்களுடன் காணொலி மாநாடு நடத்தினார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மூலங்களிலிருந்தும் குடிநீர் மாதிரிகள் உள்பட மேற்கு கோதாவரி முழுவதும் சோதனைகளை நடத்துமாறு முதலமைச்சர் ஏற்கனவே அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த மாதிரிகள் முறைப்படி சேகரிக்கப்பட்டு, வல்லுநர்களுடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். எலுருவில் ஏற்பட்ட புதிய நோய் குறித்து எய்ம்ஸ், ஐஐசிடி விரிவாக ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இயற்கை வேளாண்மை
மேலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.