மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. அந்த வகையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது. இதில் வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிக்கு, தனது 105 வயது தாயை சுமந்தபடி ஒருவர் வந்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இருவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். 105 வயதிலும் ஜனநாயகக் கடமையாற்ற ஆர்வமுடன் வந்த இந்த மூதாட்டி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.