சிறிதளவு மிளகை பொடியாக்கி, பாலுடன் கலந்து உட்கொண்டால் இருமல், சளி விலகி ஓடும். மிளகு சூப் ருசியாக இருப்பதுடன், நம் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: 2 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் மிளகுத்தூள், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, நன்றாக அரைத்த இஞ்சி 1 டீஸ்பூன் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்.
தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொதிக்கவிடுங்கள். அதில் மிளகுத்தூள், அரைத்த இஞ்சி, தேன், மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி, சூட்டோடு அருந்த வேண்டும்.
கறுப்பு மிளகில் பைபரைன், கேப்சைசின் எனும் வேதிப் பொருட்கள் உள்ளன். இதனால் மிளகு கடுமையான நாற்றம் அடிக்கும். சுவாச சுழற்சிக்கும், மூளையை சுறுசுறுப்பாக வைப்பதற்கும் பைபரைன் உதவுகிறது. வைட்டமின் A & C மிளகில் அதிகமாக உள்ளது, அது எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
கபம் மற்றும் பிற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும் மிளகு:
15 மிளகுகள், 2 கிராம்பு, கொஞ்சம் பூண்டு சேர்ந்து மிருதுவாக அரைத்து அதை நீரில் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இதை அருந்துவதன் மூலம் சோர்வு மற்றும் தொண்டைப்புண் குறையும். நுரையீரல், தொண்டையிலுள்ள கபம் நீங்கும்.
காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது 4 அரைத்த மிளகோடு தேனைக் கலந்து பாக்குடன் உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
தேனோடு கலந்த மிளகை உட்கொள்வது காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும்.
மிளகுக்கு கல்லீரலை சுத்தப்படுத்தி அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை உடையது. கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் பிரச்னைகளை மிளகு கட்டுப்படுத்தும்.
நோய்த்தொற்றுகளுக்கு எதிரான போர்:
பாக்டீரியா எதிர்ப்புத் திறன் மிளகில் அதிகமாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், வைரஸ் மற்றும் பாக்டீரிய நோய்க்கிருமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே நீக்கும் தன்மை மிளகில் உள்ள பைபரைன் வேதிப்பொருளுக்கு உள்ளது.
குடலைச் சுத்தப்படுத்தி செரிமானப் பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் மிளகு, வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கும் தேவையற்ற காற்றையும் நீக்குகிறது.
மிளகு நம் செரிமானத்தைத் துரிதப்படுத்துகிறது. நாவிலுள்ள சுவை அரும்புகளைக் கிளர்ந்தெழச் செய்யவும், செரிமானத்தை வேகப்படுத்தவும் உதவுகிறது.
ஒரு டீஸ்பூன் ஓமத்தை 2 அல்லது 3 கறுப்பு மிளகோடு கலந்து, அரிசியுடன் நெய் மற்றும் உப்பு சேர்த்து உணவுக்கு முன் உட்கொண்டால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாது.
இரவு படுக்கைகக்கு செல்லும்முன் பாலோடு மிளகுத்தூள், மஞ்சள், சுக்குத்தூள் கலந்து எடுத்துக்கொண்டால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாது.
வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், மிதமான அளவு மிளகை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.