புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கரோனா பரவக்கூடிய இடங்களாக கடைகள் உள்ளது. திருமண நிகழ்ச்சியில் அதிகபேர் கூடி தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதால் அதிகமாக பரவுகிறது. இதனால் நோய் பரவுவதை தடுக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் 60 விழுக்காடு தொற்று பரவல் குறையும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவை பொறுத்தவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. அதனால் கரோனா நோய் தொற்றுடன் நாம் வாழ பழகிக் கொள்ளவேண்டும்.
கரோனா நோய் அதிகரித்து வருவதால் மாணவர்கள் உள்ளீட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெறச் செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதால் அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. மாநில அரசுக்கு பல்வேறு நிறுவனகங்கள் நிதி உதவி வழங்கி வருகிறது. மேலும் கோவிட் நிவாரண நிதியில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பாடுபடுகின்ற அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.