புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதில் சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், கணவன் மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் என சுமார் 4,347 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.
அதற்காக, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகள், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வு, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 12 அமர்வுகள் செயல்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
இதில் பேசிய மாவட்டத் தலைமை நீதிபதி தனபால், ”மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்விக் கடன் குறித்த வழக்குகளைத் தீர்க்க, வங்கி அதிகாரிகளைக் கொண்டு ஒரு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட வழக்காடிகள் உடனடியாக அணுகி தீர்வு காணவேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்கள் நீதிமன்றம் செயல்படுவதால், இதன்மூலம் பிரச்னைகளை பொதுமக்கள் தீர்த்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் களைக்கட்டும் விவசாயிகளின் தைத்திருவிழா!