ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் துணைத் தலைவராக இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். இவருக்கும் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கும் கருத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்து வந்தன. இச்சூழலில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பல்வேறு கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதற்குப் பின் இம்மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மசோதாவுக்கு ஜேடியு தலைவர் நிதிஸ் குமார் ஆதரவளித்துள்ளார்.
ஆனால், பிரஷாந்த் கிஷோரோ குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். இவ்வேளையில் கட்சி நிலையில் விருப்பமற்ற சூழல் உருவானதால், தன் பதவியை விட்டு விலகுவதாக, கட்சித் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் கட்சியின் தலைமை இவரின் பதவி விலகல் கடிதத்தை இன்னும் ஏற்கவில்லை என்று தெரிகிறது.