டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அது நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதையடுத்து, அதனை விமர்சித்து பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இருந்தபோதிலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் அதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அமைதியாகப் போராடுவது மக்களின் உரிமை. சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு கெடு விளைவிக்காதவாறு போராட்டங்கள் நடைபெறுவதில் தவறில்லை. எனவே, சட்டத்துக்குட்பட்டு போராட்டம் நடத்த மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்தவர்கள் செய்ததுபோல், நான் இப்பணியைச் செம்மையாக மேற்கொள்வேன். எனக்கு இந்தப் பதவியை வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குழுவுடன் சேர்ந்து சட்டஒழுங்கைக் காப்பாற்றுவேன். பெண்கள் பாதுகாப்பு, குற்றங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குவேன்" என்றார். கடந்த ஒரு மாதமாக மும்பை நாக்பாடா பகுதியில் நடைபெற்றுவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைப் பெண்கள் தலைமை தாங்கி நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மக்கள் ஒற்றுமையுடன் வாழ குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்'