தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், சிதம்பரம் சார்பாக ட்விட்டரில் அவரது குடும்பத்தார் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில், "தமக்கு ஒருநாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒருகுறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.
'நாணாமை நாடாமை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்'
பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும் நன்மையானவற்றை நாடாமையும் அன்பு இல்லாமையும் நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தான் செய்த பாவங்களை கண்டு வெட்கப்படாமை, நல்லதை தேடாமல் இருத்தல், அன்பில்லாமல் இருத்தல் ஆகியவை மூட்டாள்களின் குணம் என சிதம்பரம் பாஜகவை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ - பாஜகவிற்கு ஸ்டாலின் பதிலடி!