சிவகங்கை மாவட்டத்தை அடுத்துள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த ஆராய்ச்சிகளில் தமிழர்களின் தொன்மையான சமத்துவ நாகரிகம் உலக நாகரிகத்தின் உச்சம் எனச் சொல்லும் அளவுக்கு பண்பாட்டு சான்றுகள் கிடைத்தது.
கலை, கட்டடவியல், வர்த்தகம் உள்ளிட்டவை நடந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. தற்போது, அங்கு 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இந்தியை இந்தியாவின் அதிகார மொழியாக திணிக்கும் மத்திய அரசின் போக்கை எதிர்க்கும் விதமாகவும், உலகின் பழம்பெரும் மொழியான தமிழின் பெருமை எடுத்தியம்பு வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ப.சிதம்பரம்,"கீழடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் 2600 ஆண்டு காலம் பழமையான உலகின் மூத்த பண்பாட்டு வாழ்வியலை, தொல் தமிழ் நாகரிகத்தின் வேர்களை உலகத்தின் பார்வைக்கு முன்பாக கொண்டு வந்துள்ளன என்பதை நாங்கள் கொண்டாடுகிறோம்.
இன்று இந்தி பண்பாட்டைக் கொண்டாடும் இந்தி பேசும் மக்களுடன் நாங்கள் இதனை கூறி மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் பழமையான மொழிகளில் தமிழ் மொழி உள்ளது என்று தமிழ் பேசும் மக்கள் சட்டபூர்வமாக பெருமைப்படுகிறோம்" என அதில் தெரிவித்துள்ளார்.