மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
மாநிலங்களவையில் இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் பலர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, மாநிலங்களவைத் துணை சபாநாயகரிடம் அத்துமீறி அவமதிப்பான முறையில் நடந்துகொண்டதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கை ஒரு ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
அரசு நல்ல நோக்கத்திற்காக மசோதவை நிறைவேற்றுவதாகக் கூறும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் விவாதிக்காமல் அவசர கதியில் நிறைவேற்றுவதற்கான தேவை என்ன என சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல் தன்னை புண்படுத்தியதாகக் கூறி, மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட் - 19: இந்தியாவில் 55 லட்சத்தை தாண்டிய கரோனா