மகாராஷ்டிராவில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற உறுதியோடு சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக தீவிரமான பேச்சுவார்த்தையில் இறங்கியிருந்தன. அதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் திடீர் சந்திப்பை மேற்கொண்டு பரபரப்பைக் கிளப்பினர். இதில், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் காரில் புறப்பட்டுச் சென்றார். ஆனால், பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன என்று தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதன்படி, மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் இருப்பார் என்றும், துணை முதலமைச்சர்களாக முறையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையைப் பொறுத்தவரையில், சிவசேனாவுக்கு நகர வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், பொதுப்பணி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய், உயர் கல்வி, கிராம வளர்ச்சி, மின்சக்தி ஆகிய துறைகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உள்துறை, நிதித்துறை, மருத்துவக் கல்வித் துறை, கூட்டுறவுத் துறை ஆகியவைகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சரவையில் மூன்று கட்சி அமைச்சர்களின் உத்தேச எண்ணிக்கை:
சிவசேனா - 16 அமைச்சர்கள்,
தேசியவாத காங்கிரஸ் - 15 அமைச்சர்கள்,
காங்கிரஸ் - 12 அமைச்சர்கள்.
இதற்கிடையே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் காலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சராக இருப்பார்’, என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவசேனா மன்னிப்பு கேட்டால் கூட்டணி தொடருமா? ஈடிவி பாரத்திற்கு பாஜக பதில்