இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்க மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலத்திற்கு அழைத்து வரும் முயற்சிகளில் அந்தந்த மாநில அரசு ஈடுபடலாம் என்று உள் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடிய ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தமிழ்நாட்டில் சிக்கியுள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பத்திரமாகச் சொந்த மாநிலம் திரும்பத் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 1,30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் திரிபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கூறினார்.
மேலும் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் ஆய்வு செய்ததற்கு நன்றி தெரிவித்த பட்நாயக் ஒடிசா அரசு சார்பில் முதலமைச்சரின் ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றுவார் என்றார்.
அதைத்தொடர்ந்து சென்னை குரு நானக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சில புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் நவீன் பட்நாயக் உரையாடினார். முன்னதாக நவீன் பட்நாயக் குஜராத், மகாராஷ்டிரா முதலமைச்சர்களிடமும் இது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
வெளிமாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களைத் தங்க வைக்க ஏதுவாக ஒடிசா அரசு தற்காலிக மருத்துவமனைகளையும் தனிமைப்படுத்தும் முகாம்களையும் ஏற்படுத்தியுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து திரும்பும் தொழிலாளர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தும் முகாம்களில் ஒரு குறிப்பிட்ட காலம் இருக்க வேண்டும் என்றும் ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை நீக்குக'- காங்கிரஸ் வலியுறுத்தல்