பிகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் குடிபெயர்ந்த பெண் தொழிலாளி ஒருவரின் உடல் உயிரிழந்த நிலையில் போர்வையால் மூடப்பட்டிருந்தது. இவர் குஜராத் மாநிலத்திலிருந்து சிறப்பு ரயில் மூலமாக பிகார் வந்ததாகவும், ரயிலிலேயே உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த அப்பெண்ணை அவருடைய குழந்தை எழுப்ப முயற்சித்து வழக்கம் போல விளையாடுகிறது. தன் தாய் உயிரிழந்ததைக் கூட அறிந்து கொள்ளாமல், போர்வைக்குள் நுழைந்து அரவணைப்பைக் கோருகிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், நீதிபதி எஸ் குமார் ஆகியோர் அமர்வின் கீழ் இக்காணொலி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவ்விசாரணையில், இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கு என்ன காரணம் என பிகார் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதுபோன்ற பிரச்னை மீண்டும் நடைபெறாமலிருக்க பிகாரில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதயும் படிங்க: உயிரிழந்த தாயுடன் கண்ணாமூச்சி விளையாடும் குழந்தை!