பேஸ்புக்கில் பாஜக தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் விதமான பேச்சுக்கு எதிராக அந்நிறுவனம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, புகழ்பெற்ற வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், இந்தியாவில் பணிபுரியும் பேஸ்புக் உயர்மட்ட அலுவலர்கள், பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக செய்தி வெளியானது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, பேஸ்புக் நிர்வாகிகள் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், பேஸ்புக் நிர்வாகிகள் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் பிரிதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, சமூக ஊடகத்தை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தடுத்தல், டிஜிட்டல் உலகில் பெண்களின் பாதுகாப்பை நிலைநாட்டல் உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
முன்னதாக, பேஸ்புக் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில், நிலைக்குழு தலைவர் சசி தரூர் உரிமை மீறி விட்டதாகக் கூறியும், அவரை நிலைக்குழுவிலிருந்து நீக்கக் கோரியும் பாஜகவைச் சேர்ந்த நிலைக்குழு உறுப்பினர்கள் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிழக்கு லடாக்கில் ராணுவத்தை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புதல்!