திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழி குஞ்சுகள் மற்றும் கொட்டைகைகள் என 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சாமுண்டி அம்மன் தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தரணி ராஜன். இவர் அவரது சொந்த நிலத்திலேயே விவசாயம் செய்வதுடன், ஐந்து மிகப்பெரிய கொட்டகைகள் அமைத்து, கோழி பண்ணை ஒன்றை அமைத்து தொழில் செய்து வருகிறார்.
அதாவது, கோழிகளை குஞ்சுகளாக வாங்கி அதனை மூன்று மாதங்கள் வரை இரை போட்டு வளர்த்து, அதனை ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் கிலோ கோழி 120 ரூபாய் முதல் 200 வரை விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் வளர்ந்த கோழிகளை ஏற்றுமதி செய்து விட்டு, சில நாட்களுக்கு முன்னர் புதிதாக 3,500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்ததாகக் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று (பிப்.6) அதிகாலை மூன்று மணியளவில் கோழிப்பண்ணை கொட்டகையில், திடீரென மின் பொறிகள் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொட்டகையில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிவதைக் கண்ட கோழிப் பண்ணை ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே கோழிப்பண்ணை பணியாளர்களே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல், தீ நாலாப்பக்கமும் பரவியது. அப்போது, அங்கு வந்த ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலர் மெகபூப் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலி மருத்துவ கழிவு விவகாரம்: மாநகராட்சி மூலம் கழிவுகள் அகற்றம்!
சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தியுள்ளனர். இருப்பினும், கொட்டகை மற்றும் கோழிகள் தீயில் எரிந்து கருகி சாம்பலாகின. இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கொட்டகை மற்றும் 3,500 கோழிகள் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலானவை தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த உமரபாத் போலீசார், தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து கோழிப்பண்ணையில் எரிந்த கோழிகளை பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களே அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்கள் நிலத்திலேயே குழி தோண்டி புதைத்ததாகக் கூறப்படுகிறது.