உள் துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு, ஜூன் 3ஆம் தேதி கூடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆனந்த் ஷர்மா, இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் குறித்து உள் துறை செயலர் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் கூடும் முதல் நாடாளுமன்ற நிலைக்குழு இதுவாகும். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் மாநிலங்களிடையே உள்ள ஒருங்கிணைப்பு குறித்தும் விளக்க, உள் துறை செயலர் அஜய் குமார் பல்லாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், லட்சக் கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் கால்நடையாகச் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவது குறித்தும் அவர்களுக்கு உதவ மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது- பாகிஸ்தான்