கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. வைரஸ் தொற்றால் இதுவரை 75 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதனிடையே, கேரள மாநிலம் செங்கம்மில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டு நபர் உயிரிழந்ததையடுத்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவிவருகிறது.
இதுகுறித்து கோட்டயம் மாவட்ட ஆட்சியர் சுதீர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொற்றின் அறிகுறிகள் இறந்தவரிடம் காணப்படவில்லை. இறப்புக்கு காரணம் மாரடைப்பு என முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உடற்கூறாய்வுக்கு பிறகே முழு விவரங்கள் தெரியவரும்" என்றார்.
இறப்புக்கு காரணம் கொரோனா தொற்று என வதந்தி பரவிவந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் இதுவரை கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் தனி அறைகளில் உள்ள 270 பேரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!