வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற 'இந்தியா குளோபல் வீக் 2020' என்ற மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் சொத்து என்பதை கரோனா பெருந்தொற்று நிரூபித்துள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "உலகில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து அதன் கிளைகளைத் திறக்க சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்கிறோம். இதுபோன்ற வாய்ப்புகளை ஒரு சில நாடுகளே அளிக்கும்.
சாத்தியமாகாத ஒன்றை சாத்தியப்படுத்திக் காட்டி வெற்றியடையும் மனநிலை இந்தியர்களுக்கு உண்டு. உலக நன்மைக்காக அனைத்து விதமான நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராக உள்ளது. சீர்திருத்தி, சிறப்பாகச் செயலாற்றி மாற்றியமைக்கும் இந்தியாவை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அனைவருக்குமான பொருளாதாரம், சிறப்பான வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு, வணிகச் செயல்பாடுகளை எளிமையாக்குவது, ஜிஎஸ்டி போன்ற துணிவான வரிச் சீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகளை கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கொண்டதன் மூலம் இந்தியாவுக்குப் பல பயன்கள் கிடைத்துள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் பெரு நிறுவனங்கள் பயனடையும். பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன. விண்வெளித் துறையில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக விண்வெளி தொழில்நுட்பம் வணிகப் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் சொத்து என்பதை கரோனா பெருந்தொற்று மீண்டும் நிரூபித்துள்ளது. வளரும் நாடுகளில் மருந்துகளின் விலைக் குறைப்புக்கு இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது" என்றார்.
மோடியைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலர் டொமினிக் ராப், உள்துறைச் செயலர் பிரிதி பட்டேல், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கேன் ஜஸ்டர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் இதில் பேசவுள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனாவுக்குப் பிறகான உலகை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றும்' - பிரதமர் மோடி