திருவனந்தபுரம் : கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனீஷ்(29) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்தத் திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் வீட்டார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். தொடர்ச்சியாக, அனீஷுக்கு பெண் வீட்டார் மிரட்டல் விடுத்து வந்த நிலையில், நேற்று முன் தினம் (டிச.25) அவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அண்மையில், பெண்ணின் மாமா அனீஷின் வீட்டிற்கு வந்து 'இருவரையும் ஒன்றாக வாழ விடமாட்டோம்' என்று கூறி கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக அனீஷின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து பெண்ணுடைய அப்பா பிரபுகுமார், மாமா சுரேஷ் ஆகியோரை காவலர்கள் நேற்று (டிச.27) கைது செய்தனர். இது குறித்த விசாரணையின் போது இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக காவலர்கள் கூறினர்.
இதையும் படிங்க: கோவை கொள்ளை சம்பவத்தில் திருப்பம் - பணத்தைக் கடத்திய கேரள நபரிடம் விசாரணை