சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550ஆவது பிறந்த தினம் வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். குருநானக் தேவ் பாகிஸ்தானில் வசித்துவந்ததன் நினைவாக பாகிஸ்தானில் இந்திய எல்லையில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் தர்பார் சாஹிப் என்ற குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று சீக்கியர்கள் வழிபட ஏதுவாக இருநாட்டு அரசுகளும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் கர்தார்பூர் வழித்தடத் திட்டத்தை உருவாக்கின. இதில் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இன்றி குருத்வாராவுக்கு சென்றுவரும் வகையில் இருநாடுகளுக்குமிடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் நவம்பர் 8 அல்லது 11 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சீக்கியர்களிடமிருந்து சேவைக்கட்டணம் வசூலிக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சீக்கியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இதனிடையே பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சீக்கியர்களின் புனிதப் பயணமாக கருதப்படும் தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு சென்றுவர கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்தவுள்ளதாகவும், யாத்ரீகர்களிடமிருந்து பாகிஸ்தான் அரசு சேவைக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது தங்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இந்தச் சேவைக் கட்டண நடைமுறை யாத்ரீகர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டாலும் அதில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புனிதப் பயணம் மேற்கொள்ள இனி ஒருமாத கால இடைவெளியே இருப்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.