இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவரான சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து விக்ரம் சம்பத் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார். மும்பையில் நடந்த சாவர்க்கர் புத்தக வெளியீட்டு விழாவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “இந்துத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் சாவர்க்கர் மட்டும் இந்தியாவின் பிரதமராகியிருந்தால் பாகிஸ்தான் பிறந்திருக்காது. தற்போதுள்ள நம்முடைய அரசு இந்துத்துவ அரசு. எனவே, சாவர்க்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சாவர்க்கரை சிறப்பித்துக் கூறுவதால், நான் காந்தி, நேரு ஆகியோரின் பணிகளை குறைத்து மதிப்பிடவில்லை. சாவர்க்கரின் புத்தகத்தை முதலில் ராகுல் காந்திக்கு கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். 14 ஆண்டுகள் சாவர்க்கர் சிறையிலிருந்ததைப் போல் நேரு 14 நிமிடங்கள் மட்டும் சிறையிலிருந்தால் ‘வீர்’ என்ற பட்டம் வைத்து அழைத்திருப்பேன்” என்றார்.